தெனாவெட்டு திரை விமர்சனம்!
>> Friday, 28 November 2008
ம்ம்ம்... சரி ரொம்ப நாளாச்சேன்னு ஒரு படத்தை இறக்கி பார்க்கலாம்னு, மெனக்கெட்டு ஒக்காந்து இந்த தெனாவெட்டு படத்தை இறக்கி இப்போதான் பார்த்தேன்...
இதுவரை வெளிவந்த, ஜீவா நடித்த படங்களில், அவர் வெகு திறமையுடன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதை நாமெல்லாம் பார்த்து மகிழ்ந்தோம், ராம் உட்பட.
படம் நன்றாக ஆரம்பித்தது!
என்னதான் ஊரில் வேலை வெட்டி இருந்தாலும், அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பது ஊர் அறிந்த உண்மை.
அதேபோல்தான், இந்தக் கதையிலும், ஒரு கொல்லன் பட்டறை வைத்திருக்கும் இளைஞனை அவன் தாய் சென்னைக்கு வேலைக்கு அனுப்புகிறார்.
அங்கும் அதே வேலை கிடைக்கின்றது. ஆனால் நல்ல ஊதியம். இன்றைய இளைஞர்கள் மத்தியிலே உள்ள ஒரு நிலைமையானது, எந்த வேலை கொடுத்தாலும், நல்ல ஊதியம் கிடைத்தால் அதை செய்வார்கள். அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகள், நன்மை, தீமைகளைப் பற்றி ஆராய மாட்டார்கள்.
படத்தின் கதாநாயகனும் அப்படிப்பட்ட ஒரு வேலையைச் செய்து வருகிறார்.
அச்சமயத்தில் கோயிலுக்கு செல்லும் ஹீரோ கதாநாயகியைக் காண்கிறார்.
தமிழ் திரைப்படத்தின் உயிரெழுத்தான 'காதல்' அங்கே உருப்பெருகின்றது.
இதற்கிடையில், 1980 களில் வந்த வில்லனின் மகனின் கற்பழிப்பு நிகழ்வுகளைப் போல், இத்திரைப்படத்திலும் வில்லனின் மகன் பல கற்பழிப்பு நிகழ்வுகளில் ஈடுபடுகின்றார். (நாசாமாப்போச்சு!)
தமிழ் திரைப்படத்தின் மற்றுமொரு எழுத்தான 'காவல்துறை' யும் அங்கே இடம்பெறுகின்றது. குற்றவாளியைப் பிடிக்கத் துடிக்கும் காவல்துறை துணை ஆணையர் மந்திரியிடம் அனுமதி கோரும்போது, நன்றாக நடித்துள்ளார். (டாக்டர் ராஜசேகர் போல!)
கதாநாயகிக்கு தாய் இல்லை என்ற சென்டிமென்ட்டும் இத்திரைப் படத்தில் இருக்கின்றது.
தான் செய்கின்ற வேலையால் ஏற்பட்ட பாதிப்பால், கதாநாயகனும் பாதிக்கப்படுகின்றார். தான் தவறான வழியில் செல்வோருக்கு உடந்தையாக இருப்பதை உணர்கிறார்.
அதற்கிடையில், வில்லனின் மகனின் கண்ணில், ஹீரோயின் படுகின்றார். அப்புறமென்ன, அடுத்த கற்பழிப்பு சீன் என்று நினைப்பீர்கள்! அதுதான் இல்லை!
கதாநாயகன் குறுக்கிட்டு, வில்லனின் மகனை அடித்து மருத்துவமனைக்கு அனுப்புகிறார்.
அதை அந்த காவல்துறை அதிகாரி வேடிக்கை பார்ப்பதுபோல் ஒரு காட்சி! (எல்லாம் நாம சட்டக் கல்லூரி சமாச்சாரம்தான்! ;-))
அப்போது ஒரு வசனம், நல்லாவே இல்ல!
வில்லனின் மகன், மருத்துவமனையில் இறக்கின்றார். அதனால் கோபமுற்ற வில்லன், ஹீரோவைத் தேடிச்செல்கிறார்!
அடுத்தடுத்து நடக்கின்ற சில நிகழ்வுகள் திரைப்படத்திற்கு தேவையில்லாதது.
கடைசியாக நடக்கும் சண்டைக் காட்சிகளின் போது ஜீவா நன்றாக நடித்திருக்கின்றார்.
கடைசியாக வரும் அமைச்சர் (எந்த ஊர்லையும், அமைச்சர், பாதுகாப்பில்லாமல் தனியாக வரமாட்டாருங்கோ!) காவல்துறை அதிகாரியின் கையால் இறக்கின்றார். ஒத்துக்கலாம்!
படத்தின் நிறைகள்:
1. ஜீவாவின் நடிப்பு
2. இசை (பரவாயில்லை)
படத்தின் குறைகள்:
1. கதை
2. திரைக்கதை
3. வசனம்
4. இயக்கம்
5. இயக்குனர்
6. கதாபாத்திரங்கள்
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர், சன் குழுமத்தின் தலைவரும், முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. தயாநிதி மாறனின் சகோதரருமான திரு. கலாநிதி மாறன் அவர்கள்! பில்டப்பு போதும்ல?!
இதுல, இந்தப்படம் வெற்றிநடை போடுவதாக சன் செய்திகள்ல பிரச்சாரம் வேற!
என்ன கொடுமை சார் இது?!
இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் சேர்த்து ஒரே கேள்வி!
கே: என்ன தெனாவெட்டு இருந்தா இப்படி ஒரு படத்தை எடுத்து ஊர்ல இருக்குற எல்லாத்தையும் பார்க்க சொல்லுவீங்க?
தெனாவெட்டு - தயாரிப்பாளருக்கு வேஷ்ட்டு!