சண்டைக் கல்லூரிகள் !
>> Friday, 14 November 2008
வணக்கம்,
இந்தப் பதிவு அரசியல், அரசாங்கம், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் இவர்களையெல்லாம் தாண்டி எழுதப்பட்டது.
கலாம் மட்டுமல்ல, கண் இருக்கும் அனைவரும், பலவகையான கணவுகளுடன் விடியலை எதிர்பார்த்துக்கொண்டு உறங்காமல் இருக்கின்றார்கள்!
ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, அவனது வளர்ச்சியை அணு அணுவாக ரசித்து, எவ்வளவோ கணவுகளை மனதிலே போட்டு புதைத்துக் கொண்டு, பக்கத்து வீட்டிலே அவனின் மதிப்பென்னை காட்டி பூரித்துக் கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள்.
இவன் வளர்ந்து நல்ல வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்றும், அல்லது அவனை, அவன் வாழ்வை நல்ல முறையில் அமைத்துக் கொள்வான் என்றும் பல்வேறு நினைப்புடன் இருக்கிறார்கள் பெற்றோர்கள்.
பள்ளிக் கல்வியை முடித்ததும், கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஏதோ ஒன்றில் அனுமதி கிடைத்ததும் அவனை விட அவனது பெற்றோர் பெறும் மகிழ்ச்சிக்கு வானமே எல்லை!
அவனுக்கும் சரி, அவனது பெற்றோருக்கும் சரி, கல்லூரியில் சேர்ந்து நன்றாக படித்து, அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசையில்தான் கல்லூரியின் வாயிலில் காலடி எடுத்து வைக்கின்றான்.
ஆனால்,
கல்லூரியில் பயிலும் காலத்தில் என்ன நிகழ்கின்றது?
அறிவைப்புகட்டும் புத்தகம் எடுக்கும் கையில் ஒரு மாணவனுக்கு கத்தி எதற்கு?
ஒரு மாணவனுக்கு சாதி எதற்கு?
அவன் கையில் கம்பெதற்கு?
நானும் கல்லூரியில் படித்தவன்தான், அங்கேயும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவைகளுக்காக யாரும் கத்தியையும், கம்பையும் எடுக்கவில்லை.
அங்கு கண்ட உண்மை,
எந்த இடங்களிலும் சண்டை செய்பவர்கள் செய்துகொள்ளட்டும் என்று விட்டு விட்டால், யாரும் சண்டை போட மாட்டார்கள். மற்றவர்கள் தலையிடுவார்கள் என்று நாம் எப்போது நினைக்கின்றோமோ அப்போதே அந்த சிறிய சண்டை பெரிதாக வளர்கிறது.
எந்த ஒரு கல்லூரியில் பிரச்சினை நடந்தாலும் அந்தக் கல்லூரின் தலைவர் அல்லது முதல்வர் தலையிட்டு தீர்த்து வைப்பதே முறை.
எதற்கெடுத்தாலும் காவல்துறையினர் வந்து தீர்த்து வைப்பார்கள் என்ற நினைப்பால்தான் எந்தப் பிரச்சினைகளும் பெரிதாகிறது.
கடந்த வாரம் சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் நடந்ததை யாவரும் பார்த்திருப்பீர்.
அந்த சம்பவத்திற்கு யார் காரணம்? அது தேவையானதா?
அந்த நிகழ்வை யாரும் தடுக்கவில்லை என்பதுதான் தமிழகத்தில் இன்றைய விவாதமாக உள்ளது.
நான் மனிதாபிமானம் இல்லாதவனில்லை.
ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அந்த நிகழ்வை பார்த்தவர்களுக்கு தெரியும். இப்படி எல்லா இடங்களிலும் சண்டை செய்பவர்கள் செய்துகொள்ளட்டும் என்று விட்டு விட்டால், யாரும் சண்டை போட மாட்டார்கள்.
யாரும் தடுக்கவில்லை என்பதால்தான் அந்த சண்டை உடனடியாக நின்றது.
ஒருவேளை காவல்துறையினர் உள்ளே வந்து தடுக்க நினைத்திருந்தால், அனைத்து மாணவர்களும் காவல்துறையினரைத் தாக்கி இருப்பார்கள். அந்த சம்பவத்துக்கு காரணம் காவல்துறையினர்தான் என்று தமிழகத்தை உலுக்கி இருப்பார்கள். அவர்களுக்கு ஆதரவாக, தமிழகத்திலுள்ள அனைத்து வழக்கறிஞர்களும் போராட்டத்தில் இறங்கியிருப்பார்கள்.
இப்படி ஒன்று நடக்காமல் தமிழகத்தையும், தமிழ் மக்களையும் காப்பாற்றிய பெருமை தமிழக காவல்துறையை சாரும். சட்டக்கல்லூரி வரலாறு தெரிந்தவர்களுக்கு, இந்த உண்மை புரியும்.
கடந்த காலங்களில், கலவரத்தை தடுக்கச் சென்ற காவல்துறையினறை கண்டபடி தாக்கியவர்கள் இதே சட்டக்கல்லூரி மாணவர்கள்தான் என்பதை நாம் இப்போது மறந்துவிட்டோம். இதுதான் நம்முடைய பலவீணம், அரசியல்வாதிகள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்களின் பலம்.
தயவுசெய்து காவல்துறையை சாடுவதை தவிர்த்து, கல்லூரியில் பயிலும் உங்கள் பிள்ளைகளை, நண்பர்களை, உறவினர்களை ஒழுங்காக படிக்க அறிவுறுத்துங்கள். நீங்களே மாணவர்களாக இருந்தால், தயவுசெய்து உங்கள் கவணத்தை படிப்பிலும், உங்கள் அறிவைப் பட்டை தீட்டுதலிலும் செலவிடுங்கள்.
இதுவே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
0 comments:
Post a Comment