Showing posts with label கெமிஸ்டிரி. Show all posts
Showing posts with label கெமிஸ்டிரி. Show all posts

மானாட!!! மயிலாட!!!

>> Wednesday, 30 July 2008




நான் கடந்த 3 வாரமா மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்த்தேன். இந்த நிகழ்ச்சியோட பேரை இணையத் தளங்களில் வேறு ஒரு தமிழ் பெயரில் குறிப்பிடுகின்றனர். அந்த பெயரை நாகரிகம் கருதி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை. எப்படியாவது அந்த பெயரை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் "குஷ்பு, ரம்பா (இன்சூரன்ஸ் மேட்டர்)" என்ற குறிப்பை வைத்து தெரிந்து கொள்ளவும். இந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் தான் அந்த பெயர்க் காரணத்தை புரிந்து கொண்டேன்(சரியான டியுப் லைட்டுடா நீ...).

தமிழின தலைவர் கலைஞர் தனது தொலைக்காட்சியில் தமிழ் கலைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்?. அழிந்து வரும் தொன்மையான தமிழ் கலைகள் பறை, தப்பாட்டம், கரகம், ஒயிலாட்டம் , மயிலாட்டம் போன்ற நடன நிகழ்ச்சிகளை நடத்தலாமே!! அதை விட்டு விட்டு டான்ஸ் மாஸ்டர் கலா , கற்பு நாயகி, எது எதுக்கு இன்ஸுரன்ஸ் பண்ணனும் வெவஸ்தை தெரியாத நாயகி தலைமையில் "கட்டி புடி! கட்டி புடிடா!" நடனமும் "எப்படி எப்படி சமஞ்சது எப்படி?" போன்ற ஆராய்ச்சி நடனங்களும் நமது கலாச்சாரத்துக்கு தேவைதானா?. இந்த மாதிரி நிகழ்ச்சி பார்க்கதானா இலவச டிவி கொடுத்துள்ளார்கள்??

போன வாரம் நிகழ்ச்சியில் நடுவர்கள் அனைவரும் மிகவும் மங்களகரமாக பட்டு சேலையில் வந்தார்கள். நானும் ஏதோ திருந்தி விட்டார்கள் என்ற நப்பாசையில் "செலிபிரேசன் ரவுண்ட்" (கூடிய சீக்கிரம் "முதலிரவு ரவுண்ட்" வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!!!) நிகழ்ச்சி பார்த்துகிட்டு இருந்தேன்.

அங்கே நடனமாடும் ஜோடிகளை "வாடா! நல்லா பண்ணிருக்கடா!!" என்று பலத்த மரியாதையுடன் நடுவர்கள் அழைக்கின்றனர். அதிலும் பிரியதர்ஷினி என்பவர் கண்டபடி ஆடி முடிச்சவுடன் "நல்ல கெமிஸ்டிரி இருக்கு! இன்னும் டெவலப்(யாரை வச்சு???) பண்ணனும்" என்று அறிவுரை கூறுகின்றனர். பிரியதர்ஷினி இதற்கு நன்றி தெரிவித்து கூறும் பொழுது இதற்கு அவருடைய கணவர் தந்த ஊக்கமும்(???), முயற்சியும் தான் காரணம் என்று தெரிவித்தார். நானும் அந்த தியாகியின் திருவுருவத்தை டிவியில் காட்டுவார்கள் என்று காத்திருந்து ஏமாந்து போனேன்.

நடனமாடும் ஒரு ஆணிடம் ரம்பா (ஏதோ ஒரு) அறிவை தூண்டும் விதமாக "எந்த மாதிரி பொண்ணு உனக்கு பொண்டாட்டியா வரணும்?" ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அவர் சளைக்காமல் "உங்க மூணு பேர் மாதிரி வேணும்"னு மூணு பேரையும் கரெக்ட் பண்ணும் விதமா ஒரு பிட்டை போட்டார். அந்த பதிலுக்கு அவரளித்த விளக்கம் விரசத்தின் உச்சம். அழகுல குஷ்பு மாதிரியும் கவர்ச்சில(???) ரம்பா மாதிரியும் ஆளுமை(??)ல கலா மாதிரியும் இருக்கணம்னு ஒரு புது இலக்கணம் சொல்றாரா..றாரா...றாராம்.

சிறிது வாரத்துக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஒரு ஜோடி "ருக்குமணி! ருக்குமணி! என்ன சத்தம் இந்த நேரம்!" என்ற பாடலுக்கு நடனம் என்ற பெயரில் ஆபாச அசைவுகளுக்கு துவக்கவுரை எழுதி கொண்டிருந்தார்கள். சில நிமிடங்களுக்கு பிறகு குடிசை போன்ற செட்டுக்குள் சென்று விட்டு துணி மணிகளை வெளியே விட்டெறிந்தார்கள். துணிகளை வெளியே எறிந்தவுடன் குடிசையை "சும்மா! அதிருதுள்ள"னு அதிர வைத்து முடிவுரை எழுதினார்கள். இதே நடனம் தெருவோரத்தில் மேடையிட்டு ஆடினால் "ரெக்கார்டு டான்ஸ்" என்று நமது காவல் துறை தமது கடமையை(???) செய்யும். ஆனால் இந்த நடனத்திற்கு நடுவர்கள் "வாட் எ இன்னோவேட்டிவ் ஐடியா!" என்று புகழுரைத்து என்னை அதிர்ச்சியின் உச்சிக்கே அழைத்து சென்றார்கள். பொது நாகரிகம் கருதி என்னால் இதற்கு மேல் அந்த நிகழ்ச்சிகளில் டி.ஆர்.பி ரேட்டிங் என்ற பெயரில் நடைபெற்று கொண்டுள்ள அநாகரிக விஷயங்களை விவாதிக்க இயலவில்லை.

பல வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் "மிட் நைட் மசாலா" என்று நடுநிசியில் இந்த மாதிரியான ஆபாச பாடல்களை ஒளிபரப்புவார்கள். அதே மாதிரி "மானாட மயிலாடா" நிகழ்ச்சியை "நடுநிசி நர்த்தனங்கள்" என்ற பெயரில் ஒளிபரப்பினால் சிறுவர்கள் மனதில் கேடுகெட்ட சமுதாய சீர்கேடு புகுவதை தடுக்கலாம்.

தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக தி.மு.க. மகளிர் அணி நடத்திய முதல் மாநில மாநாட்டில் தொலைக்காட்சிகளில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்களே நடத்தும் தொலைக்காட்சியில் மட்டும் ஆபாசத்தின் விளிம்பிற்கே பொதுமக்களை கூட்டி செல்லலாம். பெண்ணியம் பேசும் கனிமொழி ஏன் இது வரை இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை?.

Read more...
முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...