பொங்கி வரும் "நயாகரா"!
>> Tuesday, 2 September 2008
வணக்கம்!
மூனு நாள் விடுமுறை இருந்தா, வீட்ல ஒக்காந்துகிட்டு டி.வி ரிமோட்ல எல்லா பித்தானும் ஒழுங்கா வேலை பாக்குதான்னு ஆராய்ச்சி பன்னாம, வேற எதாச்சும் பன்னலாம்னு யோசிச்சப்போ, அலுவலகத்துல வேல பாக்குற மக்களிடம் இருந்து ஒரு அழைப்பு.
அதாங்க நம்ம ஊர்ல பணக்காரங்கல்லாம், கோடையில கொடைக்கானல் போவாங்கல்ல, அதே மாதிரி, அமெரிக்கால இருக்குற இந்தியர்களின் கோடைவாசஸ்தலமான "நயாகரா" வுக்கு செல்ல திட்டம் தீட்டிகிட்டு இருந்தாங்க.
ஜோதியில ஐக்கியமாயிட்டேன்!
மறுநாள் பயணம்னு தெரிஞ்சே முதல்நாள் பிரியாணி சாப்டு, பயணத்தை தாமதப்படுத்திய ஒரு பையன்.
9 மணி நேரம் பயணம் செய்து ஒரு இடத்தை பார்க்க போரோம், ஒரு கேமரா இல்லாம (கம்யூனிஸ்ட் மாதிரி), நாங்க எப்போதும் பி.ஜே.பி தான்னு சொல்லிகிட்டு இன்னொரு 4 பேரு.
இவங்க கூட வழக்கம்போல நம்ம ஹீரோ, அட நான்தாம்பா அது.
பயணத்தின்போது எனக்கு தேவையான அனைத்தையும் (பிரஷ், பேஸ்ட், சோப்பு, சீப்பு, துண்டு, துனிகள், கேமரா, லேப்டாப், கேமரா பேட்டரி சார்ஜர் முதலானவைகள்) முதல்நாளே எடுத்து வைத்து இருந்தேன்.
2 சீறுந்துகளில் காலை 6:30 மணிக்கு பயணத்தை ஆரம்பித்தோம். முதல் வண்டி மாலை 3:30 க்கு சென்றடைந்தது.
நான் பயணித்த வண்டி மாலை 5:30 க்கு சென்றடைந்தது.
விரைவாக குறு அலங்காரம் செய்து முடித்து கிளம்பினோம் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு.
சீறூந்துகளை சிறப்பான முறையில் நல்ல இடத்தில் $10.00 க்கு நிறுத்தி விட்டு, நடக்க ஆரம்பித்தோம்.
முதலில் பார்த்தது ஒரு பூங்கா, அதுதான் நீர்வீழ்ச்சிக்கு போகும் வழி! ஒரு வழியாக நடந்து நயாகரா ஆற்றை அடைந்தோம்.
பொன்னியின் செல்வனில் கண்டது நம் பொன்னியின் தண்ணீரை. நயாகராவில் வெகுண்டெழுந்து வந்த தண்ணீரின் வேகம், அது இசைத்த இசை, இட்ட ஓசை, போட்ட தாளம்... என்னன்னு சொல்றது...
அப்போதான் நினைச்சேன், இங்க ஒரு தடவை கல்கி வந்திருந்தா, பொன்னியின் செல்வன் எழுதி இருப்பாரான்னு!
கண்டிப்பா எழுதி இருப்பார்! (இதை இப்போதைக்கு விடுவோம்)
ஆண்டின் 365.25 நாள்களும் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுள்ள ஒரு ஆற்றின் தண்ணீர் எங்குதான் செல்கிறது என்று பார்க்க, சிறிது தூரம் உள்நோக்கி சென்று அங்கு அதற்கென அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து எட்டிப்பார்த்தேன்.
குறைந்தது 300 அடி அல்லது 100 மீட்டர் உயரத்திலிருந்து ஆற்று நீர் கீழே கொட்டியது!
நான் ஒகெனெக்கல்லில் இப்படி பார்த்திருக்கின்றேன். ஆனால் இப்படி இவ்வளவு நீர் கொட்டி பார்த்ததில்லை! எல்லாம் கர்நாடகத்துக்குதான் வெளிச்சம்!
சிறிது நேரம் கழித்து, அவ்விடத்திற்குப்பின்னால் உள்ள இடத்திற்கு சென்றேன். அகண்ட நயாகராவை அங்குதான் கண்டேன்!
ஒரு சில மணித்துளிகள் மெய் சிலிர்த்துப்போனேன்!
பறந்து விரிந்த நயாகராவின் நீரானது, குதிரையின் லாட வடிவில் 300 அடிக்கு மேல் உள்ள ஒரு பாதாளத்தில் கொட்டும்போது, கிட்டத்தட்ட 300 அடி சுற்றளவிற்கு வெண்ணிற புகைபோண்ற தோற்றம் மட்டுமே கண்ணுக்கு தோண்றியது.
பார்த்த விழிகள் பார்த்தபடி அங்கிருந்து புறப்பட்டு "மெய்ட் ஆஃப் தி மிஸ்ட்" இடத்திற்கு வந்தேன்.
இருட்டிப்போனதால், பல நிறங்களில் அருவிக்கு வெளிச்சம் கூட்டினர். அதையெல்லாம் படம் பிடித்தேன்.
மிகவும் அழகாக இருந்த வெண்ணிற அருவி, நிறம் மாறிக்காட்சியளித்தது, அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையை வெளிச்சம் போட்டுக்காட்டியது.
நானும் அருவியின் அழகை அசைபோட்டுக்கொண்டே மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.
நயாகராவிற்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள், எத்தனை நாள்களுக்கு திட்டம் தீட்டுகிறார்களோ, அத்தனை நாள்களுக்கும், உணவு (கட்டுச்சோறு) எடுத்துச்செல்லுங்கள்.
இந்திய உணவகங்கள் ஏராளமாக இருந்தாலும், குறைந்த அளவு அதிக விலை! ஆகையால், நீங்களே எடுத்துச்செல்லுதல் நன்று!
நீங்கள் எங்கு தங்கினாலும், அங்கே சிறிய குளிர்சாதனப் பெட்டி வசதி இருக்கும்.
இப்பதிவில் இடம்பெற்ற அனைத்து புகைப்படங்களும் என்னால், எனது புகைப்படக் கருவியைக் கொண்டே படம் பிடிக்கப்பட்டது.
மேலும் விவரங்கள் அறிய, என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.