ஏழையின் கொதிப்பு ...
>> Monday, 30 June 2008
திரைப்படங்களைப்பற்றி பல நூறு பதிவுகள், பாராட்டுக்கள், போட்டிகள்... அட அட... என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தும்...
திரைப்படம் என்பது என்ன? அது ஒரு கலையா? எத்துனை ஆயிரம் ஆண்டுகளாய், எந்த பாரம்பரியத்தால் அது பாதுகாக்கப்படுகிறது?
எது கலை? 1,2,3 என்று பல வேடங்களில் நடிப்பதா?
அல்லது, பல கோடி செலவில் படம் எடுப்பதா?
இல்லை, பல கோடி செலவு செய்து விளம்பர படுத்துவதா?
கையிலே பறை எடுத்து,
கண்ணாலே நோட்டமிட்டு,
வந்திருக்கும் அனைவரையும்,
வணங்கி அடிக்கின்றானே - மேளம்,
அதற்கு பெயர் கலை!
நடிப்பு என்பது தொழில். அதனால் ஒரு மொழிக்கோ, அதன்மூலம் பறைசாற்றிக்கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய கலாச்சாரத்திற்கோ எந்த ஒரு பயனும் இல்லை என்பதுதான் உண்மை.
காலங்கள் பல கடந்தன, கடவுள்கள் பல மாறின, கற்றுக்கொண்டவர்கள், கற்றுக்கொடுத்தவர்கள் காணாமல் போய்விட்டார்கள்...
காட்டுமிராண்டியிலிருந்து, காலிலே சக்கரம் கட்டி ஓடும் இந்த கால தலைமுறை வரை, யாரும், எவனுடைய நடிப்பை பார்த்தும் வரவில்லை, வரவும் முடியாது.
சுழன்று கொண்டிருக்கும் காலச்சக்கரத்தின் மேல் மிதிபட்டுக் கொண்டிருப்பவன்தான் மானிடன்.
ஏர்பஸ் 380 வந்தாலும்,
ஏர் உழுதுதான் இன்றும்
சோறுண்டுகொண்டிருக்கிறான்
என் கூடப்பிறந்தவன்!
எதற்காக இந்த
ஏமாற்றுவேலை?!
நள தமயந்தி என்றொரு திரைப்படம் பார்த்திருப்பீர்கள், அதிலே ஒரு காட்சி...
ஒரு உணவக திறப்பு விழாவிற்கு வருகைதரும் கமல் அங்குள்ளவர்களிடம் அவரவர்களின் மொழியிலே பேசுவார்...
ஒரு பெண் கேட்கிறாள்: உங்களுக்கு எப்படி எல்லா மொழியும் தெரியும்?
கமல்: எல்லாம் தொழிலுக்காகத்தான்.
இதுதான் உண்மை. இது தொழில். கலை அல்ல!
பலகோடிகள் செலவு செய்து படம் எடுக்கிறார்களாம், அதை ஹோட்டலிலும், கோவிலிலும், இன்னும் பல கோடிகள் செலவு செய்து விளம்பர படுத்துகிறார்களாம்.
கோடிக்கணக்கில் மக்கள்
குடிநீருக்கு போராடுகையில் - இவர்கள்
கோடிகளை வைத்து
கும்மியடிக்கப்போகிறார்களாம் - ஹோட்டலில்!
ஏழை எருமை மாட்டிற்கு
இருந்தாலும் எகத்தாளம்தான்!
ஏனிந்த சிந்தனை எனக்கில்லை - என்று
ஏக்கமாய் ஒரு கேள்வி!
போகதடா படத்துக்கு...
அம்மாவின் குரலை
அவமதித்துவிட்டு - இங்கே
சும்மா பொலம்புகிறான்!
கணக்கு பார்க்காமல்
கண்டபடி செலவிட்டு - இன்று
கடன்காரனாய் நிற்கின்றான்!
காரித்துப்பாத ஆளில்லை - உன்னை
கண்ட துண்டமாய்கூட வெட்டலாம்!
பால் பருவ குழந்தைக்கு
பசி வந்தபோது
பணமில்லை என்றவன் - நீ
பாலாபிஷேகம் செய்கிறாய்
பத்தடி கட் அவுட்டுக்கு!
யானைகட்டி போரடித்த வீட்டிலின்று - மன்
பானைகூட இல்லையே?
படம் எதுக்கடா - உனக்கு?
பைத்தியக்காரா!
மக்களே, நான் வேண்டுவது ஒன்று மட்டுமே. தயவுசெய்து, செலவு செய்து படம் பார்க்காதீர்கள்! உங்களுடைய பலவீணத்தை பலமாக தாக்கி பலபேர் வாழ்கிறார்கள் என்ற உண்மையை மறந்துவிட வேண்டாம்!
5 comments:
சற்றேறக் குறைய நான் திரைப்படத்தின் மீது என்ன நினைப்பிலிருக்கிறேனோ அதையே தாங்கள் மிக அழகாகவும் ஆணித்தனமாகவும் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ஆனால் தங்கள் வலைக்குள் நுழைந்தவுடன் ஒரு சொற்றொடர் கண்ணில் படுகிறதே அதுதான் நெஞ்சை உறுத்துகிறது. நாங்க நிறைய படிக்கவும் எழுதவும் நேரம் போதவில்லையே என்ற ஏக்கத்தில் வருந்துகிறோம்.
நீங்க ஓண்ணும் தசாவதாரத்தை தாக்கி பேசலயே!!! ஆனாலும் உங்க கருத்துக்கு இந்த பாசக்கார பயபுள்ள தலை வணங்குகிறான்.
நீங்க நெம்ப மோசம்! சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே!
அதுமட்டுமில்லங்க ... எல்லா படங்களும்தான்!
//ஆனால் தங்கள் வலைக்குள் நுழைந்தவுடன் ஒரு சொற்றொடர் கண்ணில் படுகிறதே அதுதான் நெஞ்சை உறுத்துகிறது.//
அது எதுங்க?
அகரம் அமுதா அவர்களே, அந்த சொற்றொடரை கண்டுபிடித்துவிட்டேன்!
அதை உறுத்தலாக நினைக்க வேண்டாம். வேடிக்கைக்காக மட்டுமே.
யாரையும் மனதளவில் துன்புறுத்த கூடாது என்பதில் மிகத்தெளிவாக இருக்கின்றோம்!
நன்றியுடன், தமிழ்
Post a Comment