வழக்கம்போல ஒரு வணக்கம் போட்டுக்கிறேன்! :-)
நீண்ட நாள்களாக தேடியும், மற்றவர்களிடம் வினவியும், பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு (நெசமாவா?!) இதை எழுதுகிறேன்.
எனக்குள் தோன்றிய பல வினாக்களில் இதுவும் ஒன்று.
இந்தியாவில் அத்தனை கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இருக்கும் நிலையில், மாணவர்கள் ஏன் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க ஆசைப்படுகிறார்கள், படிக்கிறார்கள்?
ஒரே வார்த்தையிலோ அல்லது, ஒரே வரியிலோ என்னால் விடையளிக்க முடியும். ஆனால் அது தவறாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
நான் தமிழகத்தில், திருச்சியில் இளநிலை படித்தவன். பின்னர், மேல்படிப்பில் ஆர்வமில்லாத்தால் (இளநிலையில மட்டும் ஆர்வம் இருந்தாமாதிரி !), படிக்கவில்லை.
வேலை தேடினேன், கிடைத்தது. இன்னும் பணியில் இருக்கிறேன். என்னுடன் பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலிருந்தும், இந்தியா மற்றும் வெளிநாட்டில் பயின்ற பலர் பணிபுரிகிறார்கள்.
முக்கியமாக இந்திய மாணவர்கள் மேல்படிப்புக்காக மட்டுமே வெளிநாடு செல்கின்றார்கள்.
வெளிநாடுகளுக்கு மேற்கல்வி பயில செல்வதற்கான காரணங்கள், அங்கு சென்று படிப்பின் சிறப்பம்சங்கள் இதோ உங்களுக்காக...
காரணங்கள்:
இப்படி காரணங்கள் ஏராளம்.
இதன் சிறப்பம்சங்கள்:
1. நம் நாட்டில் தொழில் சார்ந்த கல்வி முறை உள்ளது, ஆனால் தொழில் கூடங்களுடன் ஒருங்கிணைந்த கல்வி முறை கிடையாது. வெளிநாடுகளில், எல்லா கல்வி நிறுவனங்களும் பல தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன.
2. இவ்வாறு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதனால், ஒரு மாணவர் படித்துக்கொண்டிருக்கும் போதே, அந்த நிறுவனத்தில் வேலை பார்க்க வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதனால் படிக்கும் போதே போதிய அனுபவம் கிடைக்கின்றது.
3. அதுமட்டுமல்லாது, அப்படி வேலை பார்க்கும் காலத்தில் மாணவர்களுக்கு பணச்சுமையும் குறைகிறது.
4. ஒரு பாடத்திற்கு ஒரு புத்தகம் என்றில்லாமல், ஒரு மாணவரே அந்த பாடத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார். இச்செயல், அந்த மாணவருக்கு அந்த பாடத்தில் இருந்த அறிவுத்திறனை அதிகப்படுத்தும்.
5. வெளிநாடுகளில்தான் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது. புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், ஆராய்ச்சிகள் என எல்லாமே வெளிநாடுகளில்தான் ஆரம்பிக்கின்றன. இதனால் மாணவர்களுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்திற்கு ஏற்றார்போல் பாட திட்டங்கள் அமைக்கப்படுகின்றன.
6. மாணவர்களுக்க போதிய அளவில் கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சென்று சேர்கின்றன.
7. கல்விக் காலம் மாணவர்களால் நிச்சயிக்கப்படுகின்றது.
8. பாடங்களும் மாணவர்களால் நிச்சயிக்கப்படுகின்றது. வேண்டிய பாடங்களை எடுத்து விரும்பி படிக்கலாம்.
9. பேராசிரியர்கள், அதிகம் படித்தவர்களாகவும், ஆராய்ச்சி வல்லுனர்களாகவும் இருக்கின்றனர். ஆகையால் மாணவர்களின் திறன் ஊக்குவிக்கப்படுகிறது.
10. படித்துக்கொண்டிருக்கும்போதே மாணவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கின்றது.
மேலும் விவரங்கள் அறிய பின்னூட்டமிடுங்கள்.
அப்பால பாக்கலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
\\முக்கியமாக இந்திய மாணவர்கள் மேல்படிப்புக்காக மட்டுமே வெளிநாடு செல்கின்றார்கள்.\\ வேலைக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் செல்கிறவர்கள் இருக்கிறார்களே.
ஆராய்ச்சிக்கு வாய்ப்பில்லாமை. இருந்தாலும் சம்பளம் மிகவும் குறைச்சல். ஆராய்ச்சி மாணவர், விஞ்ஞானின்னா நம்மூர்ல பொண்ணோ\பையனோ கூட குடுக்கமாட்டேங்கறாங்க. பொதுவாவே நம் கல்வி முறை மாற்றப்படவேண்டியது. கல்லூரி அளவில் கூட மனப்பாடம் செய்யவைக்கும் முறை. IITக்கும் தனியார் கல்லூரிகளுக்குமுள்ள வசதி வாய்ப்புகள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். இன்னும் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசியல் தான் தீர்மானிக்கிறது.
கல்லூரி அளவில் நெருக்கமான தொடர்புகள் இல்லாமை என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
தொடர்புடைய என் பதிவு
என்ன தான் மேலை நாட்டில் வாய்ப்புகள் இருந்தாலும் தாய் நாட்டை மறக்க கூடாது அல்லவா.மேலை நாட்டு வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். தாய் நாட்டில் அந்த வாய்ப்புகளை உருவாக்கி கொடுங்கள் அடுத்த தலைமுறை யாவது அயல் நாட்டுக்கு செல்லாமல் இருக்கும்.
//என்ன தான் மேலை நாட்டில் வாய்ப்புகள் இருந்தாலும் தாய் நாட்டை மறக்க கூடாது அல்லவா.மேலை நாட்டு வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். தாய் நாட்டில் அந்த வாய்ப்புகளை உருவாக்கி கொடுங்கள் அடுத்த தலைமுறை யாவது அயல் நாட்டுக்கு செல்லாமல் இருக்கும்.//
மீண்டும், வந்துட்டேன்! இதைப்பற்றிய இன்னொரு பதிவு விரைவில்.
நன்றிங்க தல! அடிக்கடி வந்து போங்க!
வணக்கம் ஐயா:
உங்கள் அஞ்சலைப் பார்த்துவிட்டு நான் வெகு நாட்களாக என்னுடைய, கருத்தக்களை எழுத்து மூலம் வெளியிடவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், என்னுடைய வெளியூர் பயணங்கள் மற்றும் அலுவல்கள் காரணமாக உடனடியாக எழுத முடியவில்லை.
முன்னுரை: இதில் வெளிப்படுத்தப்படும் கருத்துகள் யாவையும் என் சொந்த கருத்துகளே. இந்த கருத்தகள் யாவையும் யார் மனதையும் புண்படுத்தவோ அல்ல மனதை நோகடிக்கவோ வெளிப்படுத்தும் கருத்துகள் அல்ல. இக்கருத்துகளால் இந்தியாவின் மீதோ அல்லது, நான் வெகுவாக மதிக்கும் தமிழோ அல்லது தமிழ்நாட்டின் மீதோ ஏளனப்படுத்தும் கருத்துகளும் அல்ல. அவ்வாறாக யார் மனதையும் புண்படுத்தினால், தயை கூர்ந்து என்னை மன்னித்தருளவேண்டும்.
வெளிநாடு சென்று பயில விரும்பும் மாணவர்களின் எண்ணங்கள் கோடி, அவையனைத்தும், ஒவ்வொருவரின் நிலைமை மற்றும் விருப்பங்களுக்கேற்ப, சரியானதாகவும், நியாயமானதாகவும் இருக்கக்கூடும். ஆகையால், என்னுடைய சந்தர்ப்பங்களும் மற்றும் தேவைகளும் பின்படுத்தி வெளியிடப்படும் கருத்துகள் இவை:
(1) இந்தியாவில் படிக்கும் ஒரு மாணவ/மாணவியின் கல்லூரிப் படிப்பு எந்த துறையில் அமையக்கூடியது என்பதை நிர்ணயிப்பது அந்த மாணவ/மாணவியின் பதினொன்று/பன்னிரண்டாவது வகுப்பின் துறையைக்கொண்டு முடிவாவதகும். உதாரணமாக, கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படித்தால், அவர்கள், பொதுவாக எல்லாத்துறைகளிலும் மேல்படிப்பு படிக்க இயலும். [பொறியியல், விஞ்ஞானம், சட்டப்படிப்பு, நிர்வாக-மேலாளர் படிப்பு மற்றும், தொழில்கணக்கு]. ஆனால், கணிதம் இல்லாமல், உயிரியல் எடுத்துப் படித்தாலோ, பொறியியல் போன்ற படிப்புகளைப் படிக்க இயலாது. இதுவல்லாமல், வணிகம், தொழில்கணக்கு, மற்றும், கணிதம், பொருளாதாரப் பாடங்களைப் படித்தாலோ, பொறியியல், மற்றும், விஞ்ஞானப் படிப்புகளைப் படிக்கவே முடியாது. பதினைந்து வயதிலேயே, வாழ்க்கையை நிர்ணயிக்கும் முடிவுகளை எடுக்கும் சிறுவர்கள், தங்கள் தொழில் துறையை மாற்றிக்கொள்ள, ஒரே வழி, வெளிநாடு சென்று படிப்பது ஒன்றுதான். மேலும், அந்த பதினைந்து வயதில், பெரும்பாலும், அந்த சிறுவர்களின் படிப்பை நிர்ணயிப்பது, அந்த சிறுவனின் கனவுகளோ, அல்லது விருப்பங்களோ அல்ல. பெற்றோர்கள் அந்த சிறுவன்/சிறுமியின் எண்ணங்களை உதறிவிட்டு, பெரும்பாலும் அவர்களே முடிவெடுக்கிறார்கள். அந்த பகுதியில் இல்லாத மீதம் 25% மாணவ/மாணவியர்களோ, தங்கள் தோழர்கள்/தோழிகளின் எண்ணங்களால் உந்தப்பட்டு, தங்கள் எண்ணங்கள்/விருப்பங்களுக்கு இடம் கொடாமல் ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதை மீறி நடந்தால், அந்த மாணவ/மாணவிக்கு ஊர்/உறவினர் கட்டும் பெயரோ, "நற்சொல் கேட்டு நடக்காத பிள்ளை!".
என்னுடைய தாழ்மையான கருத்து: ஒவ்வொரு மாணவ/மாணவியும் ஒவ்வொரு துறையினில் அதிபுத்திசாலிகளாகவும் தனித்திறமை வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அந்த திறமை, மற்றும், ஈடுபாட்டை அறிந்து அந்த மாணவர்களுக்கு நமது தேசம், வாய்ப்பு அளிக்குமேயானால், வெளிநாடு சென்று பயில காரணங்கள் வெகுவாக குறைய வாய்ப்புண்டு.
[என்னுடைய தனித்த அனுபவம்: நான் தவறிப்போய் 11/12 ஆம் வகுப்பில், வணிகப்பிரிவில் பயிலும் பொழுது, கணிப்பொறியின் மேல் விடாக்காதல் கொண்டு, என்னுடைய இளநிலைக் கல்லூரியில், B.Com, பயிலாமல், B.Sc., புள்ளியியல் சேர்ந்து பயின்றேன். நான் படிக்கும் பொழுது, M.Sc., புள்ளியியல் பயின்றால், I.I.T., கல்லுரிகளில், 10% சேர்க்கை M.Tech. Computer சயின்ஸ்ற்காக ஒதுக்கி இருந்தார்கள். ஆனால், நான் என் முதுநிலைப் படிப்பை தொடரும்போது அந்த இட ஒருக்கையை அகற்றி, இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு அனுமதித் தேர்வை கொண்டுவந்து, என்னுடைய கனவுகளை கலைத்துவிட்டார்கள். என் முடிவில் மாற்றம் இல்லாத நான், அமெரிக்கா வந்து மேற்படிப்பு பயின்று, இன்று கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியாக உள்ளேன்.]
(2) இந்தியாவில் பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை பலமுறை என்னை வெளிநாடு சென்று பயில ஏங்கவைத்திருக்கிறது. நான் படிக்கும் காலங்களில், கம்ப்யூட்டர் ப்ரோக்ரம்மிங் பாடங்கள், கம்ப்யூட்டர்-ஐப் காண்பிக்காமலேயே நடக்கும். நான் என்னுடைய உந்துதல்களினாலும் என் நண்பர்கள் உதவியினாலும், சென்னை I.I.T.யில் உள்ள கம்ப்யூட்டர் சென்டெரில் தவமாய் கிடந்தது கார்டுகளை பஞ்ச் பண்ணி அதை கம்ப்யூட்டர்-ல் பீட் செய்து அவுட்புட்டுக்காக தவம் கிடந்த நாள்கள் பல கோடி. என் வகுப்பில் இருந்த 98% மாணவ/மாணவிகள் கம்ப்யூட்டர்-ஐப் பார்க்காமலேயே நான்கு ப்ரோக்ரம்மிங் லங்குவேசுகளை படித்து முடித்தனர். என் வகுப்பு மாணவ/மாணவிகளின் அறிவுத்திறமையைப் பற்றி சிறு குற்றம் ஒன்றும் கூற இயலாது, ஆனால், அவர்கள் படித்த விதம், அவர்களின் திறமைக்கு ஓர் பெரிய சவாவலாகவே இன்னும் இருக்கிறது. இது கம்ப்யூட்டர் படிப்பு என்றால், நான் பள்ளிகளில் படித்தபொழுது, இயற்பியல், வேதியியல் பாடங்களை அனைத்தும் கற்பனை பண்ணியபடியே படித்து முடித்தோம். படித்தது அரசினர் பள்ளிக்கூடம் ஆனாலும், எனக்கு தெரிந்து, ரசாயன பொருட்கள், மற்றும், இயற்பியல் பாடங்களுக்கான கருவிகள் அனைத்தும் பள்ளியில் இருந்தன. ஆனால் பள்ளி ஆசிரியர்களுக்கு அதை வகுப்பறைக்குக் கொண்டுவந்து மாணவர்களுக்கு விளக்கம் கூற இயலவில்லையோ இல்லை, அவர்களுக்கு அதற்கு அனுமதி வழங்கப் படவில்லையோ, எனக்கு தெரியாது. ஆனால் புத்தகத்தை வைத்தே பாடங்களைப் புரிந்துகொள்ள, பொதுவாக மாணவ/மாணவிகளுக்கு வயதும் போதாது, அறிவு முதிர்ச்சியும் போதாது. கல்வியில் ஆர்வம் உள்ள மாணவ/மாணவிகளுக்கு வெளிநாடு சென்று மேற்படிப்பு பயிலுவதைத் தவிர்த்து வேறு வழியும் கிடையாது.
[என்னுடைய தனித்த அனுபவம்: கல்லூரிகளில் தவறிய நேரடி கம்ப்யூட்டர் பயிற்சியையும், என் கம்ப்யூட்டர் ஆசைகளையும், அமெரிக்கா வந்து மேல்படிப்பின் போதும், அதற்குபின் வேலைக்கு சேர்ந்தபோதும், தினசரி 10 லிருந்து 15 மணி நேரம் வரையில் கம்ப்யூட்டர் முன் வெவ்வேறு விஷயங்களைப் பயின்று, என் ஆசையை ஓரளவு தீர்துக்கொண்டுள்ளேன். 11 மற்றும் 12 வகுப்புகளில் கிடைக்காத இயற்பியல், மற்றும் வேதியியல் பாடங்களை, வேலைக்கு சேர்ந்தபின் இங்கு உள்ள கம்யுனிட்டி கல்லுரிகளில் சேர்ந்து பயின்று, இன்று ஓரளவுக்கு ஒரு இளநிலை பட்டதாரி அளவுக்கு புரிந்து கொண்டுள்ளேன். 25 வயதில், ஒரு கம்யுனிட்டி கல்லூரியில் சேர்ந்து, இந்தியாவில் பயில்வது என்பது ஒரு முடியாத விஷயம் மட்டும் இல்லை, மிக ஏளனமாகவும் கருதப்படும் ஒரு விஷயம். இந்த குறைபாடுகள் எதுவும் இல்லாமல் பயில முடிந்தது இங்கே! ]
இந்த மாதிரி பலவிஷயங்களால் பல நபர்கள் வெளிநாடுகளில் வந்து படிக்க வரலாம். என்னைப் பொறுத்தவரை, கை நிறைய சம்பளம் கிடைப்பது என்பது நல்ல படிப்பின் ஒரு துணைப்பொருள். சம்பளம் வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் சம்பளத்திற்காக மட்டும் படிக்க வரவில்லை. பொதுவாக, எந்த ஒரு விஷயத்திலும் எது, ஏன், எப்படி என்று கேட்பவர்களுக்கு இந்தியாவில் ஒரு சில கல்லூரிகளைத் தவிர வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதில்லை. நம் ஊரைப்பற்றிக் இதற்காக குற்றமும் கூறஇயலாது. நினைத்துப் பாருங்கள்: 12 ஆம் வகுப்பில், தோராயமாக 10 லட்சம் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அவர்கள் எழதும் விடைத்தாள்கள் அனைத்தையும் இருபது நாட்களுக்கள் திருத்தி மதிப்பெண் இடுவது என்பது மிகவும் பெரிய விஷயம். இந்த பொழுதில் ஒவ்வொரு மாணவ மாணவியின் விடைத்தாள்களைப் படித்து அவர்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் புரிந்துக்கொண்டு விடைகளைத் திருத்தினால், கிட்டத்திட்ட ஒரு வருடம் கழித்துதான் முடிவுகளை வெளியிடமுடியும். அப்படி இருக்கையில், அனைத்து மாணவர்களும் புத்தகங்களில் உள்ள மாதிரி விடையெழுத கட்டாயப் படுத்தப் படுகிறார்கள். போட்டியின் காரணமாக, இதனால் மாணவ மாணவிகள் தங்கள் சுயசிந்தனையை விடுத்து, புத்தங்களை ஒப்பிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அறிவின் சிகரமாகப் பிறக்கும் இந்தியர்கள், மனப்பாடங்களின் சிகரமாக மாறிவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அதை மாற்ற ஒரே பாதை வெளிநாட்டுக் கல்விதான். வெளிநாட்டுக் கல்வி இதை மாற்ற உத்திரவாதம் தராது, ஆனால், அதை முறியடிக்க நினைப்போருக்கு சிறந்த வழிகாட்டியே.
நான் முதலில் கூறியவாறு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலை, நிர்பந்தம், மற்றும் தேவை. எது சரி, எது சரியில்லை என்பதைக்கூற எனக்கு அறிவும் கிடையாது, அனுபவமும் போதாது. ஆனால், என்னுடைய சந்தர்ப்ப சூழ்நிலைகள், தேவைகள், எதன் காரணமாக நான் வெளிநாடு வந்து பயில முயன்றேன் என்பதைப் பலமுறை யோசித்துள்ளேன். அந்த எண்ணங்களையே நான் இங்கு பங்கு கொள்ள முயன்றிருக்கிறேன். என் எண்ணங்களில் ஏதேனும் கருத்து வேறுபாடு இருப்பின், அதைக் கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன்.
என்றும் உங்களின் நண்பன்:
சந்திரசேகரன்
மிக்க நன்றிகள் திரு. சந்திரசேகரன்.
நான் என்னத்தங்க சொல்ல போறேன். நீங்க சொல்றது அனைத்தும் உண்மையே! படிச்சிட்டு மலைச்சுப்போயி ஒக்காந்துட்டேன்!
நமது கல்வி முறையில் முதன் முதலில் மாற்றம் கொண்டு வந்த பெருமை மறைந்த முன்னாள் முதல்வர் திரு MGR அவர்களையே சேரும்.
ஆனால் அதற்குப்பின் வந்தவர்களோ, கல்வித்துறையின் முன்னேற்றத்தில் அதிக கவணம் செலுத்தவில்லை.
ஆனால் இந்த முறை நீண்ட நாள்களுக்கு இருக்காது. இதை மாற்ற என்னைப்போன்ற, என் நண்பர்கள் போன்ற ஆர்வமிருப்பவர்களினாலும், உங்களைப்போன்ற பெரிய மனிதர்களினாலும்தான் முடியும்.
பல ஆண்டுகள் கழித்து, இந்த மாத இறுதியில் நான் மொத்தமாக தாயகம் திரும்புகிறேன்.
பின்பு விரிவாக...!
Post a Comment